கிணற்றிலிருந்து பட்டதாரி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் பட்டதாரியான சக்திவேல் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பார்த்ததில் ஒரு சடலம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிணற்றுக்குள் இருந்த சடலத்தை 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்து வந்தனர். அப்போது தான் சடலமாக கிடந்தது சக்திவேல் என்பது தெரியவந்தது. அதன் பிறகு சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.