பெரம்பலூரில் காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முல்லை நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மகள் இருந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும், இவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் இருந்தார். இந்த நிலையில் ராஜா கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மஞ்சுளா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் கீழக்கணவாய் கிராமத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மஞ்சுளா தனது சகோதரர் கருப்பையா வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் மஞ்சுளாவை மூன்று நாட்களாக காணவில்லை. இதற்கிடையே மஞ்சுளா அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவருடைய விவசாய கிணற்றில் சடலமாக மிதந்ததாக தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் மஞ்சுளாவின் உடலைக் கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.