Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதணி விழாவில் தகராறு…. “தி.மு.க கவுன்சிலர் மற்றும் அ.தி.மு.க பிரமுகரை பா.ம.க பிரமுகர் வழிமறித்து தாக்குதல்”…. போலீஸ் விசாரணை….!!!!

காதணி விழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகர் இருவரையும் பா.ம.க பிரமுகர் வழிமறித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் ராமநத்தம் அடுத்து ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயதுடைய சங்கர். இவர் மங்களூர் ஒன்றியம் 17-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கின்றார். இவருடைய சொந்தக்காரர் அதே கிராமத்தில் வசித்த 58 வயதுடைய செல்வராஜ். இவர் அ.தி.மு.க கிளை செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொரக்கை கிராமத்தில் நடந்த காதணி விழாவில் இருவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அதே விழாவில் பங்கேற்ற கொரக்கையில் வசித்த பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் 49 வயதுடைய கண்ணன் என்பவருக்கும், சங்கர், செல்வராஜ் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்பின் விழா முடிந்து காரில் செல்வராஜ், சங்கர் ஆகியோர் ஆலம்பாடிக்கு சென்றார்கள். அப்போது கொரக்கை கிராமத்திற்கு அருகில் தரைபாலத்தில் வரும்போது அங்கு இருந்த கண்ணன் அவர்களை வழிமறித்து சவுக்கு கட்டையால் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உதைத்துள்ளார். மேலும் சங்கர், செல்வராஜ் இருவரையும் தாக்கினார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சங்கர், செல்வராஜ் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் கண்ணன் மீது ராமநத்தம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கண்ணன் தன்னை சங்கர், செல்வராஜ் தரப்பினர் தாக்கியதில் காயமடைந்ததாக தெரிவித்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |