திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் நெசவு தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் வட்டி செலுத்த இயலவில்லை. இதனால் ராஜேஷ் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோருடன் வந்துள்ளார்.
அப்போது ராஜேஷ் அவரது தந்தை அம்பலம், தாயார் சாந்தி ஆகியோர் வட்டி கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஜோதி மணியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற ராமன் மற்றும் சுமதியை அவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் ஜோதிமணியை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷ், சாந்தி, அம்பலம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.