Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலனுடன் அனுப்பி வைத்த பெற்றோர்…. 8 மாதங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் 8 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினரிடம் சிக்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் கூலி தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதுடைய தேன்மொழி என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேன்மொழி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாண்டி காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 8 மாதங்களாக துப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் செட்டியபட்டியில் இருக்கும் தனது தோழியின் செல்போன் எண்ணிற்கு தேன்மொழி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அந்த செல்போன் எண்ணை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி விசாரணை நடத்தியதில் தேன்மொழி விழுப்புரம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது சிராஜூதீன் என்ற வாலிபருடன் தேன்மொழி குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேன்மொழிக்கும் சிராஜூதீனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என நினைத்து தேன்மொழி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் தேன்மொழியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து 8 மாதங்களாக மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த பெற்றோர் தேன்மொழியை பார்த்ததும் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அதன் பிறகு காதல் கணவருடன் சேர்ந்து வாழட்டும் என தேன்மொழியின் பெற்றோர் அவரை சிராஜூதீனுடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |