குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜ் உடல்நிலை மோசமாகி கடந்த 25-ஆம் தேதி பரிதாபமாக இறந்துவிட்டார்.இதுகுறித்து ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் எனது மகனின் காதலியும், அவரது பெற்றோரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தனது மகனை கொன்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது ராஜூவும், கிரீஷ்மாவும் காதலித்து வந்தபோது பெற்றோர் அவருக்கு ராணுவ வீரருடன் நிச்சயம் செய்தனர்.இதனை அறிந்த ராஜ் தனது காதலியிடம் சென்று ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் என கதறி அழுதுள்ளார். அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கிரீஷ்மா கூறியுள்ளார்.
இதனை அடுத்து ராஜ் திருமணத்திற்கு தடையாக இருப்பார் என நினைத்து கிரீஷ்மா அவருக்கு குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது பெற்றோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கிரீஷ்மா கழிவறை கழுவ பயன்படுத்தும் கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன் பின் அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் கிரீஷ்மா பெற்றோருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது கிரீஷ்மா தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கிரீஷ்மா ராஜுக்கு விஷம் கொடுத்து விட்டு விஷபாட்டிலே ஜன்னல் வெளியே வீசியுள்ளார். குறித்து காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியதும் தாயார் சிந்து, தனது சகோதரர் நிர்மல் குமாரிடம் கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் தடயங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு ஜன்னல் வெளியே கிடந்த விஷ பாட்டிலை எடுத்து குளத்தின் கரையில் இருந்த புதருக்குள் வீசியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் உடந்தையாக இருந்ததை அறிந்த காவல்துறையினர் நிர்மல் குமார் மற்றும் சிந்துவை கைது செய்துள்ளனர். மேலும் கிரீஷ்மாவின் தந்தை மற்றும் உறவினர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.