மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராஜ் அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை செல்வராஜ், அவரது நண்பர்களான சிவக்குமார், பொன்னுசாமி மற்றும் செந்தில் குமார் ஆகியோருடன் பகிர்ந்துள்ளார்.
அதன் பின் அந்த மூன்று பேரும் செல்வராஜ் கூறியதை அந்த மாணவியிடம் சொல்லி மிரட்டி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை செல்வம் மற்றும் சிவா என்பவர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அதன்பின் அந்த இரு நபர்களும் தங்கள் இச்சைக்கு இணங்காவிட்டால் முகநூலில் அந்த வீடியோவை பகிர்ந்து விடுவோம் என மாணவியை மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராம மக்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் மாணவியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியின் காதலனான செல்வராஜ் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் அந்த மாணவியை பத்திரமாக மீட்டு சிவகங்கையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர்.