இளம்பெண் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரரின் கையை கடித்து தகராறு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்.பி கோவில் தெருவில் ரேவேந்திரன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். இவரும் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த இரு வீட்டாரும் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே செல்வி 5 பவுன் நகை, மொபட் மற்றும் ஒரு லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே திருமணம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி ரேவேந்திரனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று செல்வி ரேவேந்திரனின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றார். இதுகுறித்து ரேவேந்திரனின் தாயார் ரேணுகா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கும் சரவணன் என்பவர் அங்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது தகராறு செய்த செல்வியை தடுக்கும் முன்றும் அவர் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனை போலீஸ்காரர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதில் கோபமடைந்த செல்வி சரவணனின் வலது கையை கடித்து, அவரது சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்ததால் சட்டை கிழிந்து விட்டது. இதுகுறித்து அறிந்த திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியை காவல் நிலையத்திற்கு அளித்து சென்றுள்ளனர். அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். செல்வி போலீஸ்காரருடன் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.