டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்திருக்கும் படம் “லவ் டுடே”. இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பது மற்றும் ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எந்த சிரமமும் இல்லை. சமூகவலைதளங்களின் வருகை அத்தயக்கங்கள் அனைத்தையும் உடைத்து இருக்கிறது. எனினும் அதே வலைதளங்களில் நாம் அறியாத ரகசியங்களும் சிதறிக்கிடப்பதை கருவாக வைத்து “லவ் டுடே” உருவாகி உள்ளது. தன் காதலியை அதிகம் புரிந்துவைத்திருப்பதாக நம்பி வருகிறான் கதையின் நாயகன் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்). அதேபோன்று காதலனையும் அவனுடைய அன்றாடங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாள் காதலி நிகிதா (இவானா). இரண்டு பேரின் காதலும் நாயகியின் தந்தையான சத்யராஜ்க்கு தெரியவருகிறது.
இதனால் அவர் காதலனை அழைத்துப்பேசும்போது அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள ஒரு கோரிக்கை வைக்கிறார். அதன்படி, ஒரே ஒருநாள் இருவரின் செல்போனையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பின் சிறிய யோசனைக்குப் பிறகு காதலர்கள் ஒப்புக் கொண்டு தங்களின் செல்போன்களை மாற்றிக்கொள்கின்றனர். பின் நாயகன் தனது காதலியின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளைத் திறந்துபார்த்ததும் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன்பிறகு இருவருக்குள்ளும் உண்டாகும் மனப் போராட்டங்களும், சகிப்புத் தன்மையுமாக விரிந்துசெல்கிறது லவ் டுடே. முதல் பாதி முழுவதும் பார்வையாளர்களை வயிறுகுழுங்க சிரிக்க வைத்திருக்கின்றனர். குறிப்பாக சத்யராஜ் மற்றும் பிரதீப் முதல்சந்திப்பில் விசில் பறக்கிறது.
2ம் பாதிலும் பல்வேறு இடங்களில் நகைச்சுவைக் காட்சிகள் பலமாக கைதட்ட வைக்கிறது. படத்தின் 2ஆம் பாதியின் நீளம், தடுமாற்றத்தைத் தந்த முதல்பாதி மேக்கிங் போன்றவை படத்தின் சிறிய பலவீனங்கள் ஆகும். இருப்பினும் அதனை யோசிக்கவைக்க நேரம் கொடுக்காமல் சிரிக்கவைத்தே படக் குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர். ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம், இங்கு யாரையும் நம்பமுடியவில்லை என அழும் இடங்களில் டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அறிமுகமான முதல் படம் என்றாலும் நாயகனாக பல்வேறு இடங்களில் தேறி இருக்கிறார். நாயகி இவானா நடிப்பு தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டதைப் போன்ற உணர்வு ஆகும்.
சத்யராஜ், நாயகனின் அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமார், யோகிபாபு, நாயகனின் நண்பர்கள் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு பலமாக அமைந்து உள்ளனர். யுவனின் பிண்ணனி இசை நன்றாக உள்ளது. 2 பாடல்களும் காட்சிகளுடன் வரும் போது ரசிக்கவைக்கிறது. கோமாளி திரைப்படத்தின் வாயிலாக முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்து கிளைமேக்ஸ் காட்சியில் சமூககருத்தை முன் வைத்த பிரதீப் ரங்கநாதன் இந்த படத்திலும் தன் நகைச்சுவை பாணி திரைக்கதை மூலம் காதல் மீதான நம்பிக்கையை அழகாக காட்சிகளின் வழி கூறி இருக்கிறார். இந்த வருடம் வெளியாகிய நகைச்சுவைப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவுசெய்ய இருக்கும் “லவ் டுடே” குழுவினருக்கு பாராட்டுகள்.