கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்வானப்பட்டி படகு இல்லம், கே.ஆர்.பி அணை ஆகிய பகுதிகளில் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் படையெடுத்துள்ளனர். கோயில், பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதலர்கள் அதிகமாக காணப்பட்டனர்.
காதலர் தினத்தையொட்டி மலர்க்கொத்துகள் மற்றும் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் காதலர்கள் வாழ்த்து அட்டைகளோடு மலர்க்கொத்து கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதுமே ரோஜா மலர்களின் விற்பனை அமோகமாக உள்ளதாகப் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டினர் மட்டுமல்லாது அருகிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோரப் பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலம் – பெங்களூரு பகுதியிலிருந்தும் காதலர்கள் அத்வானப்பட்டி படகு இல்லத்திற்கு வந்து, தங்களது அன்பைப் பறிமாறி மகிழ்ந்தனர். ஓசூரில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர், காதலர் தினத்தை கறுப்பு தினமாகக் கொண்டு, சட்டையில் கறுப்பு வில்லை அணிந்து வலம் வந்தனர்.
காதல் ஜோடிகளை இடையூறு செய்ய சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து சாதாரண உடைகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
‘ காதலர்களைக் கண்டால் திருமணம் செய்து வைப்போம்’ என்ற வாசகத்தோடு கிருஷ்ணகிரி வி.எச்.பி. தலைவர் சீனிவாசன் தலைமையில் ஐந்திற்கும் குறைவானோர் வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.