திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள நொச்சி வயல் புத்தூரில் வித்யா லட்சுமி(19) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் கல்லூரியில் B.Com இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் வந்து மாணவியை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தாய் சாந்தி பெல் காவல் நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவியின் இறப்புக்கு காரணமான அந்த மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பெல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கூறி, உடலை வாங்க மறுத்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். மேலும் மாணவியின் உறவினர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.