இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக விவேக் கோவிலில் பூசாரியாக சேர்ந்துள்ளார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் குடித்தனம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விவேக்கின் பெற்றோர் ஸ்ரீ நிதியை திருமணம் செய்து கொண்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அவருக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் விவேக் தன்னுடைய பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்துவிட்டு ஒரு மாதத்தில் உன்னிடம் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று ஸ்ரீ நிதியிடம் கூறியுள்ளார். இதற்கு ஸ்ரீநிதியும் சம்மதித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவேக்கிற்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீநிதியுடன் இருக்கும் தொடர்பை விவேக் முற்றிலுமாக துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி விவேக் வீட்டிற்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வந்து ஸ்ரீ நிதியை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் ஸ்ரீநிதி மறுபடியும் விவேக் வீட்டிற்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளார். அவர் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிய விவேக் மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக காவல்துறையினர் விவேக் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.