பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சத்யா அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது சத்யா 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் கணபதியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சத்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.