மத்திய பிரதேசத்தில் காதலித்து ஓடிப்போன ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் அருகே உள்ள குந்தி கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் 21 வயது வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கிராமத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குஜராத்தில் வசித்து வந்த இவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வரவை அறிந்த கிராமத்தினர் ஓடிப் போனதற்கு தண்டனையாக இருவரின் கழுத்திலும் பைக் டயரை போட்டு நடனம் ஆடும்படி கூறியுள்ளனர். இவர்களின் காதலுக்கு உதவியதாக கூறி 13 வயது சிறுமியையும் கழுத்தில் டயரை போட்டு நடனம் ஆடும்படி செய்துள்ளனர். அவர்கள் நடனமாடும் பொழுது ஒருவர் பிரம்பால் அவர்களை அடித்தும் உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.