திருநெல்வேலியில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தாய் தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பாலாமடை பகுதியை சேர்ந்த பேச்சி – ஆறுமுகக்கனி (42) தம்பதியருக்கு 19 வயதில் அருணா என்ற மகள் இருந்தார். கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் அருணாவின் தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. இதற்கிடையே கோவை நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த அருணா அங்கு வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.. அருணா காதலித்து வந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தது.. இதனால் அருணாவுக்கு வேறொரு நபரை திருமணம் செய்து வைக்க திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். மேலும் அருணா தனது காதலை தாயிடம் போனில் கூறியுள்ளார். இதையடுத்து நீ ஊருக்கு வா பேசிக்கொள்ளலாம் என்று மகளை அழைத்துள்ளார் தாய்..
அதன்பின் கோவையிலிருந்து அருணா சொந்த ஊரான பாலாமடைக்கு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து காதலை கைவிடும்படி மகளிடம் தாய் கேட்டுக் கொண்டுள்ளார்.. அத்துடன் வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் ஆறுமுகக்கனி.. அதன்படி புதன்கிழமை (23ஆம் தேதி) மாப்பிள்ளை வீட்டார் வருவதாகவும் கூறியுள்ளார்.. இது அருணாவுக்கு பிடிக்கவில்லை. தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து 22 ஆம் தேதி இரவு தாய் ஆறுமுகக் கனி மற்றும் மகள் அருணாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினால் நான் காதலனுடன் சென்றுவிடுவேன் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகக்கனி மகள் என்றும் பாராமல் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.. இதையடுத்து எங்கே தாம் மாட்டிக் கொள்வோமா? என பயந்து போன ஆறுமுகக்கனி வீட்டில் உள்ள ஹேர் டை மற்றும் மாத்திரைகளை விழுங்கியதாகவும், கத்தியால் கையை வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் ஆறுமுககனியை மீட்ட உறவினர்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதற்கிடையே உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றி சீவலப்பேரி போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலை கைவிட மறுத்ததால் மகள் என்றும் பாராமல் தாய் கொலை செய்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.