காதலி பேசாமல் இருந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தை அடுத்துள்ள ஈத்தவிளை பகுதியில் சிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜிஜின் கடமைலைகுன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் திடீரென காதலை கைவிடுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த ஜிஜின் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று ஜிஜின் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக ஜிஜினை தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே வீட்டில் தனது அறையில் இருந்த ஜிஜின் வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவரது தந்தை உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது ஜிஜின் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் உடலை மீட்டு கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த கொற்றிகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜிஜினின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.