குழந்தை இறந்ததால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமார் ஆஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் ஆஷா மணலூர்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய கவியாழினி என்ற குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கவியாழினியை ஆஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது.
இது குறித்து திருப்பூரில் இருக்கும் தனது கணவருக்கு ஆஷா செல்போன் மூலம் தகவல் தெரிவித்து ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் உடனடியாக வினோத்குமாரால் ஊருக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஆஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆஷாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.