இளம்பெண் தனது கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஞ்சனா(26) அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதலர்கள் கொல்லங்கோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் அஞ்சனாவை பெரியம்மா வீட்டில் விட்டுவிட்டு முருகன் வெளிநாட்டிற்கு சென்றார்.
இதனையடுத்து வெளிநாட்டில் இருந்த முருகனின் உறவினர்கள் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததாக அவரை கேலி செய்ததால் அஞ்சனாவுடன் பேசுவதை அவர் தவிர்த்து விட்டார். இதற்கிடையே அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 3 ஆண்டுகளாக முருகன் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசவில்லை. இது தொடர்பாக அஞ்சனா நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சனா தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது முருகன் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் அஞ்சனாவை ஏற்க மறுத்தனர். இதனால் தனது கை குழந்தையுடன் அஞ்சனா நேற்று இரவு முருகன் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அஞ்சனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போதும் முருகனின் தந்தை எனக்கும், எனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இதனால் தொடர்ந்து அஞ்சனா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.