கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் முடித்துள்ளார். இந்தத் திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக, அனீஷுக்கு பெண் வீட்டார் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், நேற்று மாலை அவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக, பெண்ணுடைய அப்பா பிரபுகுமார், பெண்ணின் மாமா சுரேஷ் ஆகியோரை காவலர்கள் இன்று கைது செய்துள்ளனர். அண்மையில், பெண்ணின் மாமா அனீஷின் வீட்டிற்கு வந்து ‘இருவரையும் ஒன்றாக வாழ விடமாட்டோம்’ எனக் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக அனீஷின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தினர். ஆனால், காவல்துறையினர் அனீஷுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
திட்டமிட்டு அனீஷை கொலை செய்துள்ளதாக அனீஷின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அனீஷை கொலை செய்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், வாளால் அனீஷை வெட்டிக் கொலை செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த அவரது சகோதரர் கூறியுள்ளார். இந்தச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.