கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் விஜய்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் விஜயலட்சுமி(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஈரோட்டில் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான நந்திமங்கலத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விஜயலட்சுமியின் தாய் வாசுகி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வரதட்சனை கேட்டு விஜய், அவரது தாய் வாலாம்பாள் ஆகியோர் தனது மகளை அடித்து துன்புறுத்தியதாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாகவும் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் விஜய் மற்றும் வாலாம்பாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.