தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூமரத்தூர் கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமார் குணநந்தினி(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குணநந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
நேற்று மாலை உடல் நலம் பாதிக்கப்பட்ட குணநந்தினியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த போது நந்தினி சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் நந்தினியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நந்தினியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நந்தினியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.