தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கானாவூர் பகுதியில் செங்கல் சூளை தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் நாகராஜனின் சகோதரியான முத்துலட்சுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து கேட்பதற்காக நாகராஜன் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாகராஜன், முருகன், முருகனின் தாயார் பார்வதி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த பார்வதி கம்பால் நாகராஜனை தாக்கியுள்ளார். அதன்பின் முருகன் அருகில் கிடந்த கல்லை எடுத்து நாகராஜனின் தலையில் போட்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த நாகராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன் மற்றும் அவரது தாய் பார்வதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.