காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புலியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார். அங்கு மாலாவிற்கும் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று அரவிந்த் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாலா தென்காசி காவல்நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரவிந்த் கடைசியாக சீதாராமன் என்பவருடன் செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது. ஆனால் சீதாராமன் தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து பொன்னரசு என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய போது அரவிந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் பொன்னரசு அளித்த தகவலின்படி காவல்துறையினர் பாட்டாகுறிச்சியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் அழுகிய நிலையில் கிடந்த அரவிந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது அரவிந்துக்கும், மாலாவின் தாயாரான பொன்ராணி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்ராணியின் திட்டப்படி சீதாராமன், தம்பிரான், பொன்னரசு, மணிகண்டன் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி அரவிந்தை செல்போனில் அழைத்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் காரில் தென்காசியிலிருந்து கீழப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை அரவிந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது 4 பேரும் இணைந்து அரவிந்தை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கல்குவாரி குட்டையில் அவரது சடலத்தை வீசி சென்றது தெரியவந்துள்ளது.