காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு நரேஷ் சிவசந்தியா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவசந்தியா கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அடுத்து பெற்றோர் சமாதானம் செய்து 2 வாரத்திற்கு முன்பு கணவன் மனைவி இருவரையும் சேர்த்து வைத்தனர்.
நேற்று மதியம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தையை தூக்கிக் கொண்டு சிவசந்தியா வெளியே சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.