Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” பின்பு… சாதியை காரணம் காட்டி பிரிந்து சென்ற கணவர்… இளம்பெண் தர்ணா…!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அருந்ததி. இவர் கல்லூரியில் படிக்கும்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினோத்குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதல் ஜோடி இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில்  திருமணம் செய்து கொண்டனர் .

அதன் பின்னர் அருந்ததி தனது கணவர் வினோத்குமாருடன் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு மாதம் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் அருந்ததி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அதனை காரணம் காட்டி வினோத் குமார் அருந்ததியிடமிருந்து பிரிந்து தனது பெற்றோருடன் சென்றுள்ளார். இதனால் வினோத்குமாரை மீட்டு தருமாறு  அருந்ததி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே வினோத்குமார்  இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே அருந்ததி தனது கணவரை மீட்டுத் தரக் கோரியும் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது தாயுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருந்ததியிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து அருந்ததி தனது தாயுடன் புறப்பட்டு சென்றார். பின்னர் நடந்த சம்பவம் அனைத்தையும் அருந்ததி மனுவாக எழுதி அங்குள்ள காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |