காதல் திருமணம் செய்ததற்கு 40 ஆயிரம் அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் ஜீவானந்தம், நாகராஜ் என்பவரது மகள் பவானியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பவானியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட ஜீவானந்தம் அவசர அவசரமாக பவானியை திருமணம் முடித்தார்.
இந்நிலையில் இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு பஞ்சாயத்தார்கள் கமலக்கண்ணன், செல்வராஜ் மற்றும் சண்முகம் ஆகியோர் பவானி மற்றும் ஜீவானந்தத்திற்கு காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக 5 ஆயிரம் ரூபாயை பெண் வீட்டாரும் 8000 ரூபாய் மாப்பிள்ளை வீட்டாரும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறிய நிலையில், தற்போது மாப்பிள்ளை வீட்டார் 40,000 ரூபாயும் பெண் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். இதனையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி 20 ஆயிரம் ரூபாயை பஞ்சாயத்தில் அபராதமாக செலுத்தினோம். ஆனால் மீதமுள்ள பணத்தை ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
கூலி வேலை செய்துவரும் நாங்கள் அவ்வளவு பெரிய தொகையை ஒரு வாரத்தில் எப்படி தயார் செய்ய முடியும் என கேட்டதற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர் எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து கமலக்கண்ணன் மற்றும் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சண்முகம் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.