காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அருகே இருக்கும் நாகியம்பட்டி கரிகாலன் குட்டையை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(34). இவரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா(29) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அகல்யாவின் தாயார் தனது விவசாய நிலம் ஒன்றை விற்பதற்காக சென்ற ஒரு மாதமாக பேசி வருகின்ற நிலையில் விற்கும் நிலத்தில் அகல்யாவின் பங்கை கேட்டு வாங்கி வா என மணிகண்டன் இரும்புராடால் அகல்யாவை அடித்து தாக்கியதாக சொல்லப்படுகின்றது. இதில் அகல்யாவுக்கு கையில் அடிபட்டு இருக்கின்றது.
ஆனால் பல நாட்களாகியும் அவர் சிகிச்சை எடுக்காமல் இருந்த நிலையில் அகல்யாவின் தாயார் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது அடிபட்ட காரணத்தை கூறியதை தொடர்ந்து அகல்யாவின் தாயார் சென்ற 17ஆம் தேதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டிய பொழுது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதை தொடர்ந்து அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அகல்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் போலீசார் மணிகண்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.