நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோளக்கவுண்டனூர் காலனியில் வசிக்கும் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை எனது மகன் காதலித்தார். இது தொடர்பான பிரச்சனையில் போலீசார் இரு தரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து பேசி கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 8- ஆம் தேதி காணாமல் போன எனது மகனை தேடி சென்றேன்.
அப்போது ஆமைபாறை பகுதியை சேர்ந்த சேது மற்றும் சிலர் வீட்டிற்குள் வந்து எனது அத்தை சுலோச்சனா, தங்கை கவுசல்யா ஆகியோரை அடித்து உதைத்ததோடு, எனது மனைவி சுமதியை தாக்கி ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சேது, ராமச்சந்திரன், சுரேஷ், மஞ்சுநாதன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.