தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கையும், சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் ஸ்டாலின் முதல்வர் ஆவாரா என தொடர்ந்து அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டும், பல சமயங்களில் கிண்டலடிக்க பட்டும் வந்துள்ளது. இப்போது திமுக ஆட்சி ஏறக்குறைய உறுதியான நிலையில், ஸ்டாலின்தான் முதல்வர் என்பதில் ஐயமில்லை. 10 ஆண்டுகள் திமுகவை துடிப்பான எதிர்க்கட்சியாக உயிர்ப்புடன் வைத்திருந்து, சிறப்பாக செயல் பட்டதை விட முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.