திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புதியதாக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துணைவேந்தராக பணியாற்றி வந்த நடராஜன் ஓய்வு பெற்றார். அதன்பின் துணைவேந்தராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து துணைவேந்தராக தற்போது பல்கலைக்கழக பேராசிரியர் தேவேந்திரன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்திற்கு மத்திய உயர் கல்வித்துறையின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.மாதேஸ்வரன் என்பவரை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புதிய துணைவேந்தராக நேற்று மாலை பொறுப்பேற்றார்.
இவர் கணித அளவீட்டு பொருளாதாரத்தில் உலக அளவில் வல்லுனர். இவர் 30 வருடங்களாக பெங்களூருவில் உள்ள சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பின் இயக்குனராக அதே நிறுவனத்தில் பொறுப்பு வகித்து வந்தார். அவர் ஒரு கல்வியாளராக ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடக மாநில அரசின் பல்வேறு பொருளாதார திட்டங்களை வடிவமைக்கும் உறுப்பினராகவும், ஆராய்ச்சிக் குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு “கேம்பே கவுடா” என்ற கர்நாடக அரசின் உயரிய விருதும், தெற்காசிய நாடுகளின் பொருளாதார மற்றும் சூழலியல் அமைப்பு சார்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளது.