சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான பேச்சியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 2010- ஆம்ஆண்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 2545 விதம் 15 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் 1 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு செய்து தனது கணவர் பேச்சியண்ணன் வாரிசுதாரராக இணைத்துள்ளார். இந்நிலையில் ஆயுள் காப்பீடு நிறுவனம் மல்லசமுத்திரம் கிளையில் ஆயுள் காப்பீடு செய்திருந்ததால் அதற்கான இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்பட்டது.
கடந்த 2012-ஆம் ஆண்டு கௌரி கொடுத்த பாலிசி தொகையை ஏஜென்ட் ஒன்றரை மாதங்களாக நிறுவனத்தில் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் பாலிசி காலாவதியாகிவிட்டது. இதனையடுத்து நிறுவன ஏஜென்ட் வெள்ளை தாள் வெளியிட்ட பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலிசியை புதுப்பித்து கொடுத்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென மாரடைப்பால் கௌரி உயிரிழந்ததால் பேச்சியண்ணன் தனக்கு தர வேண்டிய 1 லட்ச ரூபாய் பணத்தை வழங்குமாறு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை அணுகியுள்ளார்.
அப்போது 2012-ஆம் ஆண்டு கௌரிக்கு கேன்சர் நோய் இருந்ததாகவும், புதுப்பிக்கும் போது அவற்றை மறைத்து விட்டதாகவும் கூறி காப்பீடு நிறுவனத்தின் தொகையை வழங்க மறுத்துள்ளனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் மல்லசமுத்திரம் கிளை மேலாளர் உட்பட 5 பேரும் பேச்சியண்ணனுக்கு ஒரு லட்ச ரூபாய் பாலிசி தொகையை 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 6 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும். இதனையடுத்து மன உளைச்சலுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, வழக்கு செலவு தொகை 5000 ஆகியவற்றை 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.