காய்கறிகள் பிரஷ்ஷாக பயன்படுத்தினால் சத்துக்கள் அப்படியே கிடைக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் கடைக்குச் சென்றால் மொத்தமாக வாங்கி வைத்து விடுகிறோம். இதனால் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்காது. அப்படி நாம் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
நாடு முழுவதும் நோய் தொடர்ந்து புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதும் அவசியம். உண்ணும் உணவு முதல் படுக்கும் படுக்கை அறை வரை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். போதாக்குறைக்கு வெளியே செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்நிலையில் காய்கறிகளை பிரஷ்ஷாக வைத்திருக்க முடியவில்லை என இல்லத்தரசிகள் புலம்புவது உண்டு. வீட்டில் பிரிட்ஜ் இருந்தால் போதும் எல்லா காய்கறிகளையும் அதில் அடைத்துவிடலாம். ஆனால் எல்லா காய்கறிகளையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியாது.
சில காய்கறிகளை அப்படி வைத்தால் வீணாகிவிடும். அப்படி இருக்க எந்தெந்த காய்கறிகளை எப்படி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கேரட் எப்போதும் பிரஷ்ஷாக இருக்கும். ஒரு வாரம் கடந்தும்தோல்கள் வழவழத்தன்மையோடு வாடியபடி இருக்கும். இதை தவிர்க்க கேரட்டை அகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் வைக்க வேண்டும். இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றி வைத்தால் 10 நாட்கள் வரை கேரட் அப்படியே இருக்கும்.
பச்சைமிளகாயை பொருத்தவரை காம்பை நீக்கி வைத்தால் நீண்ட நாள் நீடிக்கும். அப்படி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். முருங்கைக்காயை அப்படியே நீள்வாக்கில் வைத்தால் அவை விரைவில் தளர்ந்து விடும். அதனால் வாங்கிய கையோடு துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். ருசியும் மாறாது.
முருங்கைகாயை போன்று பாகற்காயையும் இரண்டாக வெட்டி வைத்தால் வாடாமல் இருக்கும். இல்லை எனில் விரைவில் பழுத்து விடும் . இஞ்சி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். இஞ்சியை எவ்வளவு பிரஷ்ஷாக வாங்கி வைத்தாலும் அதன் தோல் சுருங்கி கருத்து விடும். இதற்கு வீட்டில் சிறிய அளவில் டப்பா இருந்தால் அதில் மண்ணை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மண்ணை ஈரமாக்கி அதில் இஞ்சியை புதைத்து வைத்து விட்டால் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெங்காயம் கூடையில் வைப்பது வழக்கம். பெரும்பாலும் எல்லோரும் கூடையில் தான் வைப்பார்கள். ஆனால் வெங்காயத்தை தரையில் பரப்பி வைத்தால் நீண்ட நாட்கள் வரை அப்படியே இருக்கும். சற்று ஈரப்பதமாக இருந்தால் கூட 15 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பிடிகருணை என எந்த கிழங்காக இருந்தாலும் அதை முதலில் மண் போக சுத்தம் செய்த பிறகு காற்றாட வெளியில் வைத்தால் அவை 20 நாட்கள் வரை இருக்கும்.
தக்காளியை எப்போதும் சற்று காயாக வாங்கவேண்டும். அதை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் அவை விரைவில் பழுக்காது. எனவே பழுக்கும் வரை வெளியில் வைத்திருந்து பிறகு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
இதை தவிர வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய் போன்ற காய்கறிகளை அதிக நாட்கள் பிரிட்ஜில் வைக்க வேண்டாம் . காய்கறிகளை சமைக்கும்போது ஓடும் நீரில் கழுவி பிறகு பயன்படுத்தவேண்டும். காம்பு இருக்கும் காய்கறிகளில் அதிகப்படியான ரசாயனங்கள் சேர்த்து விட வாய்ப்பு உண்டு என்பதால் காய்கறிகளின் காம்புகளை முழுவதும் நீக்குவது நல்லது.