பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கின் போது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காய்கறி வண்டியை அப்பகுதி காவல்துறை அதிகாரி காலால் உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட சாலையில் காய்கறி விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பக்வாரா பகுதியை சேர்ந்த காவல் அதிகாரியான எஸ்.எச்.ஓ நவ்தீப் சிங் என்பவர் விதிமுறைகளுக்கு மீறி செயல்பட்ட காய்கறி வண்டியை காலால் எட்டி உதைத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை அறிந்த பஞ்சாப் போலீஸ் டைரக்டர் ஜெனரல் டிங்கர் குப்தா இது மிகவும் மிருகத்தனமான செயல் என்றும், இதற்கு தண்டனையாக நவ்தீப் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் காவல் அதிகாரியான நவ்தீப் சிங்கின் செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், காய்கறி விற்பனையாளரின் இழப்பை ஈடு செய்யும் வகையில் கபுர்தலா காவல்துறையினர் அவர்களது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை இழப்பீடாக வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளனர்.