கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வழக்கறிஞர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வழக்கறிஞரான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் எனது வீட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வருமாறு கூறினேன்.
சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் மகன் எனக்கூறி ஒருவர் செல்போன் மூலம் அழைத்து பாலசுந்தரம் ரோட்டில் நிற்பதாக கூறியுள்ளார். இதனால் அங்கு சென்று வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அப்போது எனது அம்மா மாற்றுதிறனாளி என்பதால் காரில் அமர்ந்து கொண்டு பேசலாம் என அந்த நபர் தெரிவித்தார். அதனை நம்பி நான் வருகிறேன் என கூறியதும் திடீரென காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் எனது கைகளை கட்டி வாயை பொத்தி கடத்தி சென்றதோடு, நான் வைத்திருந்த 27 ஆயிரத்து 500 ரூபாய், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் 35 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
இதனை அடுத்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற வலுக்கட்டாயமாக என்னை மது குடிக்க வைத்ததால் நான் மயங்கி விட்டேன். இதனை அடுத்து கண்விழித்து பார்த்தபோது அவர்கள் எனது ஆடைகளை அகற்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. தற்போது அந்த புகைப்படத்தை காண்பித்து என்னிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதனை தரவில்லை என்றால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவோம் என மிரட்டல் விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.