வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள சிறுமுகை பகுதியில் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் அந்த காரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். அந்த காரில் வந்த 3 பேர் தப்பித்து ஓடிவிட்டனர்.
அதன்பின் காரில் இருந்த 2 நபர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் லட்சுமணன் மற்றும் மணி என்பதும், இவர்கள் வனப்பகுதியில் மான் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.