Categories
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா – கோயில்களில் தீபம், சொக்கப்பனை ஏற்றம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள உற்சவருக்கு பால தீபமும் ஏற்றப்பட்டது. மலைமீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் மேல்தளத்தில் மூன்றரை அடி உயர கொப்பரையில் 300 கிலோ நெய் 160 மீட்டர் துணியால் திரி போடப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதி சுவாமி சன்னதி பொற்றாமரைக்குளம் இரண்டாம் பிரகாரம் ஆகிய இடங்கள் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டு தீப அலங்காரத்தில் கோவில் முழுவதும் ஜொலித்தது. பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் திருகார்த்திகை தீபத்தையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக விநாயகர் முருகக் கடவுளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக முதன்முறையாக பக்தர்கள் இன்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இணைய வழியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கார்த்திகை தீபத்தையொட்டி  திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  தாயுமானவர் சன்னதியில் இருந்து மாலை 5 மணிக்கு தீபம் புறப்பட்டு அங்கிருந்து தாயுமானவர் மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கொண்டு வாத்தியங்கள் சிவ வாத்தியங்கள் முழங்க தீபம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் 273 அடி உயரமும் 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சியில் தாயுமானவர் சன்னதி பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் 1000 லிட்டர் எண்ணெய் ஊற்றி 300 மீட்டர் திரியிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இதனால் வீடுகளில் மாடியில் நின்று பக்தர்கள் வழிபட்டனர். கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலில் நேற்று மாலை நந்தி மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி சன்னதிக்கு எதிரே உள்ள பாரதியார் தெருவுக்கு அம்பாள் சென்றடைந்தார். அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள மெயின் ரோட்டிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்துக்கு முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கபட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |