ஒவ்வொரு மாதமும் சில நிதி மாற்றங்கள் தொடங்குகிறது. எரிபொருள் மற்றும் எல்பிஜி விலைகளில் மாற்றங்கள் என்பது சாதாரணமாகிவிட்ட நிலையில் வேறு சில பெரிய பொருளாதார மாற்றங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் சேவை கட்டணங்கள் காப்பீட்டுக்கான அதிக பிரீமியம் மற்றும் எல்பிஜி விலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் உட்பட சாமானியர்களின் பட்ஜெட்டை பாதிக்கும் பல மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கி அடமான விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.5 சதவீதமாக வைத்துள்ளது. இந்த உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கான வங்கி மற்றும் வங்கி அல்லாத சேவை விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதன்படி குறைந்தபட்ச கணக்கு இருப்புக்கு உள்ளவர்களுக்கு வசூலிக்கும் தொகையை வங்கி உயர்த்தி உள்ளது. இந்த மாற்றமும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சராசரியாக மாத இருப்பு தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயரும் என்று கூறப்படுகின்றது.
அதன்பிறகு இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்த்தப்படுகிறது. 75 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு ரூ.538. 75 சிசிக்கு மேல் ஆனால் 150 சிசிக்கு மேல் இல்லாத இரு சக்கர வாகனங்களுக்கு பிரீமியம் ரூ.714 ஆக இருக்கும். இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு பிரீமியம் களும் உயர்த்தப்பட்டுள்ளது.
1000 சிசி-க்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு மூன்றாம் நபர் பிரீமியம் ரூ.2,094. 1000 சிசிக்கு மேல் ஆனால் 1500 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட காருக்கு மூன்றாம் தரப்பு பிரீமியம் ரூ.3,416. 1500 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட கார்களுக்கு மூன்றாம் தரப்பு பிரீமியம் ரூ.7,897 ஆக இருக்கும். இதையடுத்து விமான எரிபொருள் விலை ஜூன் 1-ஆம் தேதி முதல் அதிகரித்துள்ளது. விமான விசையாழி எரிபொருள் விலைகள் வழக்கமாக மாதத்தின் முதல் நாள் மற்றும் மாதத்தின் 16-வது நாளில் திருத்தப்படும். அதன்படி, 5.29% அல்லது கிலோலிட்டருக்கு ரூ.6,188.25. இதன் மூலம், தற்போது ஒரு கிலோ லிட்டர் ரூ.1,23,039.71 ஆக உயர்ந்துள்ளது.