அஹமதாபாத்தில் வாடகைக்கு எடுத்த காரில் உள்ள உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரத்தை கழற்றி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்தில் சுரேந்திரன் நகரை சேர்ந்த ஆனந்த் பட்டேல் என்பவர் டிராவல்ஸ் ஒன்றில் காரை கடந்த மாதம் 27 ஆம் தேதி வாடகைக்கு எடுத்தார். 30-ஆம் தேதிக்குள் திருப்பி தந்து விடுவதாக கூறி எடுத்துச் சென்ற அவர் காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு டிராவல்ஸ் நிறுவனத்தை தொலைபேசி மூலமாக அழைத்து உங்கள் கார் விபத்தில் சிக்கி விட்டதாக கூறினார். அதோடு விபத்தில் சிக்கி இருக்கும் இடம் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இதனால் டிராவல்ஸ் நிறுவனம் வாகனத்தின் புகைப்படத்தை கேட்டது. அதற்கு அவர் அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வாகனத்தின் ஜிபிஎஸ் மூலமாக காரை கண்காணித்த நிறுவனம் கார் கேட்பாரற்று நிற்பதை கண்டு அதிர்ந்தனர். பின்பு நிறுவனத்தை சார்ந்தவர்கள் கார் இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான முன் பம்பர், மியூசிக் சிஸ்டம், இன்ஜின், சைடு மிரர், பின்புற இருக்கை போன்றவை காரில் இருந்து திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்நிலையத்தில் வாடகைக்கு கார் எடுத்து சென்ற நபர் மீது புகார் அளித்தனர் . காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.