பிரித்தானியா நாட்டின் ராம்ஸ்கேட்(Ramsgate) பகுதியில் வேகமாக வாகனம் ஓட்டி வந்த நபர் ஏற்படுத்திய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாதசாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, கடந்த புதன்கிழமை ராம்ஸ்கேட் பகுதியின் லியோ போல்ட் தெருவிலுள்ள பல மாடி கார் பார்க்கிங்கிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் 30 வயதுடைய பெண் மற்றும் 80 வயதுடைய ஆண் என இருவர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
அத்துடன் ஆரம்ப பள்ளி வயதுடைய சிறுமி படுகாயங்களுடன் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்த விபத்தில் 40 வயதுடைய ஆண் மற்றும் சிறுவன் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர். அதன்பின் விபத்து இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராம்ஸ்கேட்டைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரை வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.