தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழக கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே வீசக்கூடும். இதனால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தற்போது நாகப்பட்டினத்திலிருந்து 760 கிலோ மீட்டர் தூரத்திலும் மற்றும் சென்னையில் இருந்து 950 கிலோமீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்தில் அது இலங்கை கடற்பகுதியை வந்தடையும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கடற்பகுதிக்கு அருகாமையிலும் வரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.