கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மீன் வாங்க குவிந்த வியாபாரிகள், பொது மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடந்த 14ஆம் நாள் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதோடு.. இரண்டு மாதங்கள் இந்த தடைக்காலம் நீடிக்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித்தொழில் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மீன் வாங்கி செல்கின்றனர்.
இதனால் முட்டம், குளைச்சல், தேங்காய் பட்டினம் போன்ற இடங்களில் மீன்களை வாங்க மீனவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மீன்பிடி துறைமுகங்களில் அதிக அளவில் குவியும் பொது மக்களால் சமூக இடைவெளி பின்பற்றபடாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மீண்டும் அதிக அளவில் அந்த பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து விடுமோ என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.