திமுக ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முதற்கட்ட தேர்தலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்புவதற்கும் 9 மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் ஒரு ஜனநாயக விரோத செயலை திமுக அரசு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் முழுமையாக திமுக அரசின் ஜனநாயக விரோத செயலை ஏற்றுக்கொண்டு, ஜனநாயகத்திற்கு மாறாக, ஜனநாயகத்திற்கு நேர் விரோதமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு அடிப்படை உரிமையாக இருக்கின்ற வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பது குடி மக்களுடைய உரிமை. எனவே தேர்தல் காலத்தில் கட்சிகள் வாக்குச்சாவடியினுடைய எண் அடங்கிய வாக்கு சீட்டை கொடுப்பது கிடையாது.
உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொடுப்பார்கள். வாக்குச்சாவடி எங்க இருக்கு ? உங்களுடைய வாக்கு சாவடி எண் என்ன ? அந்த தகவல்கள் இல்லை. அந்த சீட்டை கொடுக்கவில்லை. தேர்தலைப் பொருத்தவரை ஒரு நியாயமான, ஒரு ஜனநாயக ரீதியிலே, ஒரு நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற வகையில் தான் எங்களுடைய கருத்தை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தினோம்.
தேர்தலைப் பொருத்தவரை ஒரு ஜனநாயக ரீதியான அமைதியான நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அப்படி நீங்கள் நடத்துவதாக இருந்தால் எங்களுக்கு உறுதி கொடுங்கள் என்று சொல்லி அதன் அடிப்படையிலே அட்வகேட் ஜெனரல் அவர்களும், தமிழ்நாடு அரசும், அதே போன்று மாநில தேர்தல் ஆணையம் சரி உயர்நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தது. ஆனால் அந்த உறுதியை காற்றில் பறக்க விடுகின்ற வகையில் தகவல்கள் வருகின்றன என ஜெயக்குமார் விமர்சித்தார்.