Categories
மாநில செய்திகள்

காற்றில் விஷ வாயுக்கள்…. பள்ளிக்கரணை மக்களுக்கு பேராபத்து…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவில் நுரையீரல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐஐடி கூறியுள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஒரு முக்கிய ஆய்வினை நடத்தியது. இதற்காக சென்னை 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது particulate matter குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பர்டிகுலேட் மேட்டர் என்பது காற்றில் கலந்துள்ள தூசுகள், அழுக்கு, அசுத்தமான திரவ துளிகள், கரி, புகை போன்றவற்றை குறிக்கும். இந்நிலையில் காற்றில் அசுத்தங்கள் கலந்துள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக சுற்றுச்சூழலில் முக்கியத்துவம் பெற்ற இடங்கள், கடலோர பகுதிகள், அதிக, நடுத்தர மற்றும் குறைவான போக்குவரத்து நிறைந்த இடங்கள், தொழிற்சாலை குடியிருப்புகள், குப்பை மேடுகள், மருத்துவமனைகள், கட்டுமான பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக இடங்கள் போன்றவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் நகர்ப்புறங்களில் அதிக அளவில் மாசுக்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குப்பைமேடு இடம்பெற்றுள்ள பெருங்குடி பகுதியில் காற்றில் அதிக அளவு மாசுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள ஈச்சங்காடு பகுதியில் மாசுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. அதன் பிறகு தொழிற்சாலை அதிக அளவில் உள்ள மணலி பகுதியிலும் காற்றில் மாசுக்கள் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காற்றில் உள்ள மாசுக்களால் மனிதனின் சுவாச பாதையில் பிரச்சனை ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மாசு படிந்த பகுதியாக பள்ளிக்கரணை இருப்பதாக ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் இருந்து காற்றில் அதிகப்படியான விஷ வாயுக்கள் மற்றும் நுண் மாசத்துகள்கள் போன்றவைகள் வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீண்ட கால சுவாச பாதிப்புகள், நுரையீரல் தொற்று மற்றும் இதர உடல் நல கோளாறுகள் போன்றவைகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாதிப்புகள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களை விட குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தான் அதிக அளவில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதில் இருந்து மாநகராட்சியின் அலட்சியமே குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாமல் இருப்பதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பள்ளிக்கரணை பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |