தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை செயல்படுத்துவது குறித்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தலைமையில் பல் துறை அலுவலர்களின் கூட்டம் நடந்தது. அதன் பிறகு பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் கட்டுமான பணிகளுக்கான தடை வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி வரை நீடிக்கும். அரசுத் துறையினர் வீட்டிலிருந்தே பணியாற்றுவர். மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும். இன்றியமையா பொருட்கள், பணிகளுக்கான வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் டெல்லிக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.