நாட்டில் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
காற்று மாசு உயர்வு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதிலும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது.
காற்று மாசு, மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பதிவாகும் நகரங்கள் மற்றும் மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். மேலும் நவம்பர் 9 முதல் 30-ஆம் தேதி வரையில் தடையை அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மிக விரைவாக அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.