Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல்… கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடைகால சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஹோட்டல்களில் காலாவதியான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், நந்தகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பேசியதாவது, ஊட்டியில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பதாக தகவல் வந்துள்ள நிலையில், பாரதியார் காம்ப்ளக்ஸ், கமர்சியல் சாலை உட்பட பல பகுதிகளில் 20-க்கும் அதிகமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 கடைகளில் கெட்டுப்போன கறிக்கோழி, இறைச்சி, சப்பாத்தி மாவு, காலாவதியான உணவு பொருட்கள், அரிசி சாதம் என 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, தலா ரூ 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போன, காலாவதியான உணவுப் பொருட்களை  சுற்றுலாப்பயணிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே காலாவதியான, கெட்டுப்போன உணவுப் பொருட்களை  விற்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக  தெரிவித்தனர்.

Categories

Tech |