Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்…நண்பனை தூக்கிவந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வைத்த சக மாணவர்கள்…!!!!

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் நண்பனை தூக்கிவந்து சக மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 331 மாணவ மாணவிகள் இந்த பொதுத் தேர்வை எழுதினார்கள். அதில் தென்காசி அருகிலுள்ள வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாணவன் குத்துக்கல்வலசையில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி விழுந்துவிட்டார்.

இதனால் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று உறுதியுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலில் கட்டுடன் தென்காசியில் இருக்கின்ற அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்கு பள்ளி வண்டியில் சுப்பிரமணியன் அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு தேர்வு மையம் மாடி பகுதியில் தேர்வு எழுதும் அறை இருந்தது.

மேலும் இந்த மையத்திற்கு வேறு யாரும் செல்ல முடியாது என்பதால் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் சுப்பிரமணியனை தூக்கி சென்று தேர்வு எழுத வைத்தார்கள். சுப்ரமணியனின் வலது கையை ஒரு மாணவரின் தோளிலும் இடது கையை மற்றொரு மாணவரின் தோளிலும் போட்டு தூக்கி சென்று தேர்வு எழுத வைத்தனர். அதன்பின் தேர்வு முடிந்ததும் சக மாணவர்கள் அவரை தூக்கி வெளியே கொண்டு வந்து பள்ளி வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் சுப்பிரமணியன் கூறியதாவது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலி இருந்த நிலையிலும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என்ற உறுதியுடன் தேர்வை எழுதினேன். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நிறைய மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Categories

Tech |