Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காலையில்…. “வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை”…. காரில் கடத்தி சென்ற 7 பேர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை காரில் கடத்திய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் அன்புச்செல்வன்(55). இவர் வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் பயணியர் விடுதி எதிரில் மூன்று நட்சத்திர ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் வத்தலகுண்டு பைபாஸ் ரோட்டில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகில் வாக்கிங் செல்வது வழக்கம்.

அதன்படி அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த 7 பேர் இறங்கி அன்புச்செல்வனை காரில் தூக்கிப் போட்டு மின்னல் வேகத்தில் மதுரையை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் வாக்கிங் சென்ற அன்புசெல்வன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவருடைய குடும்பத்தினர் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அவருடைய குடும்பத்தினர் சந்தேகம் அடைந்த நிலையில், அவரது மகன் ஜெய் கிஷோர் தனது தந்தையை தேடி அவர் வழக்கமாக வாக்கிங் செல்லும் கணவாய்பட்டி பிரிவுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் அவரது தந்தையின் ஒரு கால் செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அந்த விசாரணையில் ஒரு கும்பல் அன்பு செல்வனை காரில் கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஜெய் கிஷோர் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் தனது தந்தைக்கும், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அருள்நாயகத்துக்கும் இடையே கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர்கள் கடத்தி இருக்கலாம் என்று கூறினார். இதனை அடுத்து  நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர்கள் அன்புச்செல்வனின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பறையன்குளம் கண்மாய் அருகே அவரது செல்போன் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள மணி என்பவரின் வீட்டில் அன்புசெல்வனை அடைத்து வைத்து இருந்ததை பார்த்த காவல் துறையினர் அவரை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து அன்புச்செல்வனை கடத்தி சென்ற அருள் நாயகத்தின் ஆதரவாளர்களான வத்தலகுண்டை  சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் 46 வயதுடைய வெள்ளைசாமி, தெற்கு தெருவை சேர்ந்த 30 வயதுடைய சிவா, கூலிப்படையினரான மதுரை பேரையூரை  சேர்ந்த 32 வயதுடைய வடிவேல், மதுரை பழங்காநத்ததை  சேர்ந்த 36 வயதுடைய பாலமுருகன், விருதுநகர் வடமலைக்குறிச்சியை  சேர்ந்த 23 வயதுடைய விஜய், விருதுநகர் கலைஞர் நகர் போலீஸ் பாலம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பிரபாகரன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 42 வயதுடைய மணி ஆகிய ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், அவர்களிடம் இருந்த கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல் கும்பலை பிடித்த  தனிப்படையினரை போலீஸ் சுப்பிரண்டு சீனிவாசன் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |