செல்போன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வங்கி கடன்கள், அரசு பணி கோருதல், மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 97 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு 11,55,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு கேடயம் வழங்கினார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்ப்பதற்கும் குறைகள் தொடர்பான மனுக்களை பெறுவதற்கும் பிரத்தியேகமான செல்போன் எண் 9597021141 உருவாக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த செல்போன் எண்ணை மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொண்டு whatsapp மூலமாகவும், அழைப்புகளை மேற்கொண்டும் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.