சென்னை ராயபுரத்தில் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகமெங்கும் பல இடங்களில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு உள்ள நோய்களுக்கு மாதாந்திர மருந்துகளும் அந்த மினி கிளினிக்கில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மினி கிளினிக்குகள் பொதுமக்களுக்காக செயல்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
முதல்வர் அறிவித்த 2000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக சென்னையில் 47 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. கிராமப்புறத்தில்1,400 கிளினிக், சென்னையில் 200, நகரங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.